மகனுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற தந்தை ; 2ம் பரிசு பெற்று அசத்தல்..!
பரிசு வென்ற கணேசமூர்த்தி
கோவை ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பெட்டியில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை விளம்பரத்திற்காக அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இதனால் உணவகத்தில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதனிடையே கணேசமூர்த்தி என்ற கால் டாக்சி டிரைவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது மகன் பிரவீன் ராஜ்க்கு பிறந்தது முதல் ஆடிசம் பாதிப்பு உள்ளது. பள்ளியில் சேர்த்து படிக்க 19 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதற்காக தான் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.
தூத்துக்குடியில் அனைத்தையும் இழந்து இங்கு வந்துள்ளேன். ஒரு பாலக்காடு டிரைவர் சொன்னதால், இந்த போட்டியில் கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டேன். என் மகனை ஒரு ஆள் உடனிருந்து பார்த்து கொள்ள வேண்டியுள்ளது. அவனது படிப்பிற்கும், மருத்துவ செலவிற்கும் உதவுங்கள்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். போட்டியின் முடிவில் நான்கு பிரியாணிகளை சாப்பிட்ட கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu