கோவையில் சிறை கைதிகளுக்கு தேனீ வளர்க்க பயிற்சி

கோவை மத்திய சிறை (கோப்பு படம்)
கோவையில் சிறைக்கைதிகளுக்கு தேனீ வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறை கைதிகள் தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும் போது ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வருமானமும் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் சிங்காநல்லூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறை இயங்கி வருகிறது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும், அதன்மூலம் வருவாய் ஈட்டவும் விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளும் செய்து வருகின்றனர். காவல்துறை இயக்குனர் மற்றும் சிறைகள், சீர்த்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை தேனீ பண்ணை சார்பில் தேனி வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு, சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், விற்பனை முறைகளையும் சிறைக்கைதிகள் விடுதலைக்கு பிறகு அதனை ஒரு தொழிலாக செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து சிறைக்கைதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu