தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரக்கோரி நடைபெற்ற போராட்டம்.
கோவை மாநகர் உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டது. அப்பகுதியில் வசித்த மக்களுக்கு வேறு இடத்தில் தகர கொட்டகை அமைத்து தரப்பட்டது. மேம்பால பணிகள் முடிந்தவுடனேயே அதே இடத்தில் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மேம்பால பணிகள் நிறைவுற உள்ள நிலையிலும் குடியிருப்புகள் கட்டி தரப்படவில்லை. இதனால் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் தகர கொட்டையிலேயே வசித்து வருகின்றனர். இது சம்பந்தமாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பிலும் குடியிருப்புகள் கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிஎம்சி காலணியில் தூய்மை பணி புரியும் அருந்ததியர் மக்களின் குடியிருப்புகளை உடனடியாக கட்டி தர வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், முன்னாள் கோவை எம்பி பி ஆர் நடராஜன் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், கட்சியினர் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் இடையில் மிதமான மழை பெய்தது. இருப்பினும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக இது சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu