ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
அண்ணாமலை
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பணத்தை கொடுப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வீடியோவை காவல் துறையினர் சரி பார்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இப்போது பொதுவெளியில் அரசியல் உள்நோக்கத்தோடு பகிரப்படும் இந்த வீடியோ சரியாக எட்டுமாதம் முன்பாக ஜூலை 2023, காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. என் மண் என் மக்கள் யாத்திரையை ஒட்டிய நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணாமலைக்கு அன்போடு ஆரத்தி எடுத்த ஒரு சகோதரிக்கு, பதில் மரியாதையாக கொடுக்கப்பட்ட பணத்தினை கூட வைத்து இப்படி அரசியல் செய்ய முடியுமென நினைக்கிறார்கள் சிலர்.
தமிழ்நாட்டு மண்ணில் ஆரத்தி எடுப்பதும், ஆரத்தி எடுப்பவர்க்கு அன்பாக ஆரத்தி காசு கொடுப்பதும் காலம் காலமாக வழங்கி வரும் வழக்கம். ஆனால் இது தேர்தல் காலம். ஆரத்தி எடுத்தாலும் பணம் கொடுக்க கூடாது, அதை மீறி கொடுத்தால் அது வாக்குக்கு கொடுக்கப்பட்ட லஞ்சமாகவே கருதப்படும் என்பதை எல்லோரும் அறிவர்.
எனவே இந்த வீடியோவுக்கும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கும், இப்போது நடந்து வரும் பிரசாரத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை. இந்த தவறான செய்தியை பரப்புவோரின் உள்நோக்கத்தை கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் அண்ணாமலை அளித்த விளக்கத்தில், “இந்த வீடியோ ஜூலை 27 ம் தேதி ராமநாதபுரத்தில் எடுக்கப்பட்டது. பாசத்தின் அடையாளமாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது வழக்கம். ஆனால் அதனை நாங்கள் தேர்தல் நேரத்தில் கடைபிடிப்பதில்லை. மற்றவர்களைப் போல வாக்குகளுக்கு நாங்கள் பணம் கொடுப்பதில்லை. இன்று பொய்களைப் பரப்பும் கட்சிகளால் உண்மையான பணப்பரிமாற்றம் நடக்கும் போது ஆட்சியர் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu