350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கோவையில் நடந்த விழாவில் 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி இயக்குனர் எஸ்.நாகராஜ் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- அரசு பள்ளியை போன்று தனியார் பள்ளிகளும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது. சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் அரசு பள்ளிகளை போன்று தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளையும் நாங்கள் எங்கள் பள்ளி போன்று தான் கருதுகிறோம். அனைத்து மாணவர்களின் நலன் கருதியே நாங்கள் பலவற்றை செய்து வருகிறோம். அரசு பள்ளியும், தனியார் பள்ளியும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்து தாய்மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

கொரோனாவால் மக்கள் மட்டுமல்ல பள்ளி நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு துணையாக நீங்கள் இருங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருச்சி தனியார் பள்ளி இயக்கக இணை இயக்குனர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story