கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் அரசு அலுவலர்களிடம் ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பொதுமக்களுக்கு அரசு அலுவலர்களை பார்ப்பதற்கே பல்வேறு தடங்கல்கள் வருவதாகவும், இடைத்தரகர்கள் பலரும் இடையில் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். அரசு அலுவலக நடைமுறைகள் பற்றி தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் குறிப்பிட்டு வைக்கலாம் என அறிவுரை வழங்கினார்.
அரசு அலுவலர்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பினாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறினார். பொது மக்களிடம் அவர்களது குறைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்று கூறிவிட்டால் அந்த வேலை எளிதாக முடிந்து விடும் என்றார். மேலும் இடைத் தரகர்களை தவிர்க்க வேண்டுமெனவும், உங்கள் அலுவலகங்களை நீங்கள் தான் மேற்பார்வை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அரசு அலுவலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுவதாகவும், அதன்படி முதல் நாளான இன்று அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்பு எண்களை எவ்வாறு அளிக்க வேண்டும், என்பது குறித்து எடுத்துரைத்ததாக தெரிவித்தார். மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள இடைத்தரகர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
மேலும் அரசு அலுவலக நடைமுறைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்க அறிவுறுத்தி இருப்பதாகவும், இதன் மூலம் இடைத்தரகர்கள் நுழைவது தடுக்கப்படும் என்றார். மேலதிகாரிகளாக இருந்தாலும் பொது நடைமுறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டும், வேறு எதையும் செய்ய கூடாது என்றால் அதனை செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் அவ்வாறு செய்தால் அதன் மூலம் வருகின்ற விளைவுகளை சந்திப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் தற்பொழுது நவீன பண பரிவர்த்தனை மூலம் பண பரிமாற்றம் நடைபெறும் புகார்களையும் விசாரித்து வருவதாகவும் வங்கி கணக்குகள் முழுவதையும் சரிபார்த்து முழு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற புகார்கள் வரும் பொழுது அந்த அரசு அதிகாரிகள் மீது எந்த விதத்தில் வேண்டும் என்றாலும் விசாரணையை கொண்டு செல்ல முடியும் என கூறினார். மேலும் பொதுமக்களும் அரசு பணிகள் ஒரே நாளில் முடிந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அரசு அலுவலக அதிகாரிகள் வைத்து உள்ள பணத்திற்கான ஆதாரங்களை முறையாக வைத்து இருந்தால் அந்த பணங்களை பறிமுதல் செய்ய மாட்டோம் எனவும் கூறினார். அரசு அதிகாரிகள் மீது புகார் வரும் பட்சத்தில் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளக் கூடும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu