கள்ளக்குறிச்சி விவகாரம் கள்ளச் சாராயத்தால் திமுக அரசு நடத்திய கொலை : அண்ணாமலை குற்றச்சாட்டு
Coimbatore News- அண்ணாமலை
Coimbatore News, Coimbatore News Today- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து, கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட பாஜகவினரை அக்கட்சித் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”முறைப்படி பாஜக தலைவர்கள் அந்தந்த மாவட்டத்தில் காவல் துறையினரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். ஆனால் இன்று கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, தற்போது பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திமுக கள்ளக்குறிச்சி விவகாரத்தை பேச பயப்படுகிறது. அதை பற்றி பேசக்கூடாது என திமுக பயப்படுகிறது. இதில் உள்ள தொடர்பு வெளியில் வந்து விடும் எனப் பயப்படுகிறது.
தமிழகத்தில் 4661 நூலகங்கள், 2027 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. ஆனால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் இருக்கின்றது. மதுவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கின்றனர். இது கள்ளச்சாராய சாவு என்பதை விட கள்ள சாராயத்தால் திமுக அரசு நடத்திய கொலை என்று சொல்ல வேண்டும். காவல் நிலையம் நீதிமன்றம் அருகில், கள்ளக்குறிச்சியில் சாதாரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் தினமும் குடிப்பவர்கள் கிடையாது. இவர்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடிப்பவர்கள். அது கட்டுப்படியாகாமல் 25 ரூபாய்க்கு விற்பனையாகும் பாக்கெட் சாராயத்திற்கு வந்திருக்கின்றனர்.
திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்டி என்பதெல்லாம் மாறி, தற்போது தமிழகம் தலை குனிந்து நின்று கொண்டிருக்கிறோம். இதைக் கண்டித்து பேசக்கூட உரிமை மறுக்கப்படுகிறது. ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி திமுக.
இன்று மதியம் தமிழக ஆளுநரிடம் தொலைபேசியில் அழைத்து புகார் சொல்லியிருக்கிறேன். பேசக்கூடிய சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லி இருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் எங்களுடைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் கொடுத்துள்ளார். இது தொடர்பான பாஜக குழு ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றனர். திமுகவிற்கு இருக்கும் தொடர்பையும் ஆளுநரிடம் சொல்ல இருக்கின்றோம். இந்த அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதையும் ஆளுநரிடம் சொல்ல இருக்கிறோம்.
திமுக தலைவர்களுக்கும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் இருக்கும் தொடர்பை வெளிக்கொண்டு வரவேண்டும். இதற்கு தான் சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது. இதை ஆளுநரிடமும் முன் வைக்க இருக்கின்றோம். நீதிமன்றம் அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற்று தான் சிபிஐ விசாரணைக்கு வர முடியும். சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே முழு உண்மை தெரியவரும். தமிழகத்தில் வார, வாரம் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மையப்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 55 பேர் இறந்ததற்கு முதல்வர் ஏன் செல்லவில்லை என கேட்க கூடாதா? பட்டியலின தேசிய ஆணையம் தமிழகத்திற்கு வரவேண்டும். 43 பேர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். 10 பேர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். அந்த ஆணையம் உடனடியாக வந்து பார்த்து மாநில அரசை அறிவுறுத்த வேண்டும். கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு காசு என்பது இன்றைய விவாதம் கிடையாது. பல வீடுகளில் நாளை காலை அடுப்பு எரியாது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர குடித்த பிறகு நிவாரணம் கொடுப்பது சரியா? தவறா? என்பதற்குள் போகவில்லை.
இடைத்தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலிலேயே 40க்கு 40 கொடுத்து இருக்கிறார்கள். இந்த விக்கிரவாண்டி தேர்தலில் இது எதிரொலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. கூட்டணி கட்சியான பா.ம.க விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுகின்றது. போராட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னதாகவே அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்து விட்டனர் காவல் துறை என்னை எதுவும் தடுக்கவில்லை. எங்களுடைய கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு கூட நடக்கக்கூடாது என இருக்கிறோம். மீண்டும் போராட்டம் நடத்த நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu