கூண்டுக்குள் அமர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் பந்தய சாலை பகுதியில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியும், கூண்டுக்குள் அமர்ந்தும் விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், “பூமி அனைத்து உயிர்களுக்குமானது. நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போலவே நம்முடன் நேரடியாக சம்பந்தப்படாத மற்ற விலங்குகளையும் நேசிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. மனிதர்களுக்கு அடிப்படை உரிமைகள் இருப்பது போலவே விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளன. அவை சுதந்திரமாகத் திரியவும், உண்ணவும், உறங்கவும் உரிமை பெற்ற உயிரினங்களாகும். அவற்றை அடைத்து வைத்தல், கட்டி வைத்தல், காயப்படுத்துதல், துன்புறுத்துதல், கொல்லுதல், உணவுக்காக பயன்படுத்துதல் போன்றவை விலங்குகளுக்கான உரிமை மீறல்களாகும்.
குறிப்பிட்ட சில வளர்ப்பு பிராணிகளைத் தவிர மற்றவற்றை வேட்டையாடவும், உணவுக்காக பயன்படுத்தவும், துன்புறுத்துவதும் கூடாது. விலங்குகளுக்கான இந்த உரிமைகளுடன் நலமாக வாழத் தேவையான வழிகளை உருவாக்கிக் கொடுப்பதே விலங்குகள் நல தினத்தின் முக்கிய நோக்கமாகும். விலங்குகளுக்கு வாழத் தேவையான சூழலை உருவாக்குவது, அவற்றுக்கு பொருத்தமான உணவுக்கு வழிவகுப்பது, அவை வழக்கமான குணங்களுடன் வாழ அனுமதிப்பது, அவற்றை காயப்படுத்தும், கட்டுப்படுத்தும் தடைகளை அனுமதிக்காமல் இருப்பது, காயங்கள் மற்றும் நோய்களில் இருந்து அவற்றை காப்பாற்றுவது, மற்ற விலங்குகளிடம் இருந்து ஆபத்து நேராமல் ஒவ்வொரு விலங்கிற்கும் தனி இருப்பிட சூழலை பேணுவது ஆகியவை விலங்குகள் நலத்திற்கான வழிகளாகும்.
சர்க்கஸ்களில் சாகசம் செய்வதற்காக பயிற்சிகள் அளிப்பது, வளர்ப்பு என்ற பெயரில் சங்கிலியால் கட்டி வைத்து அவற்றை தனிமைப்படுத்துவது, உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது, இறைச்சிக்காக மொத்தமாக விலங்குகளை அழிப்பது, பலவிதமான விலங்குகளையும் வளர்ப்பு பிராணிகளாக மாற்றுவது, அசைவ விலங்குகளுக்காக சைவ விலங்குகளை உணவாக கொடுப்பது, ஆய்வுகளுக்காக பிராணிகளை பராமரிப்பது, மோதவிடும் விளையாட்டுகளில் மற்றும் காயப்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது போன்ற நேரங்களில் விலங்குகள் அதிகமாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகளுக்கும் விடுதலை வேண்டும். விலங்குகளுக்கு சுதந்திரம் வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்”எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu