வேட்பு மனுத்தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்

வேட்பு மனுத்தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்
X

சவப்பெட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்த சுயேட்சை  வேட்பாளரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

கோவையில் நூர் முகமது என்பவர் சவப்பெட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இன்று முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் மனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர், கடந்த பல ஆண்டுகளாக தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வருகிறார். இதுவரை 42 முறை அவர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு உள்ளார்.

ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வது மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என அவர் யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மக்களவை தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று மனு தாக்கல் செய்வதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அப்போது நாட்டில் ’ஜனநாயகம் இறந்துவிட்டது’ என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனு தாக்கல் செய்ய அவர் வருகை புரிந்தார்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், சவப்பெட்டியுடன் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தொடர்ந்து காரில் இருந்து சவப்பெட்டியை இறக்குவதற்கு முன்பே, அதனை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அவரை மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!