வேளாண்மை பல்கலைக் கழக முதுநிலை, முனைவர் பட்ட மேற்படிப்பு சேர்க்கை ரத்து

வேளாண்மை பல்கலைக் கழக முதுநிலை, முனைவர் பட்ட மேற்படிப்பு சேர்க்கை ரத்து
X

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் (கோப்பு படம்).

வேளாண்மை பல்கலைக் கழக முதுநிலை, முனைவர் பட்ட மேற்படிப்பு சேர்க்கை ரத்து என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள முதுநிலைப் பட்ட மேற்படிப்புப் பயிலகமானது தனது 11 உறுப்புக் கல்லூரிகளின் வாயிலாக 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்குகிறது. இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 08.05.2024 முதல் பெறப்பட்டு அதற்கான நுழைவுத் தேர்வு 23.06.2024 அன்று நடத்தப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு 2,881 விண்ணப்பங்களை பல்வேறு மாநில வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் இருந்து, இளநிலை படிப்பை முடிப்பதில் வெவ்வேறு நிலைகளில் உள்ள, மாணவ மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் பெரும்பாலான மாணவ - மாணவியர் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிக்க இயலும் என்றும், அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கால தாமதமாக இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களினை தவிர்க்கும் விதமாக நடப்பு ஆண்டில் மே மாதம் துவங்கப்பட்ட முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Tags

Next Story