ஆடித் திருவிழா: தெய்வங்கள் வேடமணிந்து பெண்கள் வழிபாடு
தெய்வ வேடமணிந்து பெண்கள் வழிபாடு
கோவை, ரத்தினபுரி, சுபாத்தாள் லேஅவுட் பகுதியில் அமைந்து உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஒரு மாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதைத் தொடர்ந்து 43 வது ஆண்டு திருவிழா கடந்த 23 ஆம் தேதி பூசாட்டுதலுடன் துவங்கியது.
அக்னி கம்பம் நடுதல், சீர் கொண்டு வருதல், மாபெரும் திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இதில் சிவன், பார்வதி திருவுருவங்கள் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் குளத்தில் இருப்பது போன்று வடிவ அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் உள்ள கருமாரியம்மன், சிவன் போன்ற அனைத்து கடவுளின் திருவுருவ சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து இருந்தனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண் பக்தர்கள் கல்வி, செல்வம், வீரத்தை குறிக்கும் விதமாக தமிழ் காவியம் சரஸ்வதி சபதத்தில் வரும் பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூன்று தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். மேலும் இன்று சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நூற்றுக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மேலும் கும்மியாட்டம், சக்தி கரகம் அழைத்து வருதல், கரகம் பூவோடு திருவீதி உலா, மாபெரும் அன்னதானம், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், கும்மி அடித்தல், மஞ்சள் நீராட்டு, மறுபூஜை திருத்தேர் திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருகிற 9.8.2024 வரை நடைபெறுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu