வீடு கட்டித் தருவதாக கூறி மோசடி: தொழிலதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

வீடு கட்டித் தருவதாக கூறி மோசடி: தொழிலதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
X

 கோப்பு படம்

கோவையில் வீடு கட்டித் தருவதாக 65 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கீதாமணி. இருவரும் சொந்த வீடு கட்ட முடிவு செய்து இதுதொடர்பாக கடந்த 2017 ஜனவரியில் பேரூர் காளம்பாளையத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினர்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரன், தங்களது நிறுவனத்தில் 30 சதவீதம் பணம் செலுத்தினால் வீடு கட்டித் தரப்படும் என்றும், மீதித் தொகை வங்கிக் கடன் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பி, ரவிச்சந்திரன் 2 தவணைகளாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்தை ஜெகதீஸ்வரனிடம் வழங்கினார். அவர்களுக்கு தீத்திப்பாளையம் பகுதியில் வீடு கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் கீதாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு கட்ட பூமிபூஜை நடத்தினர். இரு நாள்கள் கழித்து, அதே இடத்தில் மற்றொரு குடும்பத்தினர் வீடு கட்ட பூமிபூஜை செய்தனர்.

இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குநரிடம் கேட்கவே, அவர்செலுத்திய பணத்தை திருப்பி அளிக்கும் விதமாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையை ஜெகதீஸ்வரன் வழங்கியுள்ளார்.

ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால், அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், கோவை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வீடு கட்டித் தருவதாக கூறி ஜெகதீஸ்வரன் 65 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விஜயகுமார், முகமது ரபி, உமாதேவி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 கோடியே 30 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், நிறுவனத்தில் பணிபுரிந்த விஜயகுமார், முகமது ரபி, உமா தேவி ஆகியோரை விடுதலை செய்தார்.

Tags

Next Story