சென்னை புழல் சிறையில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு..

சென்னை புழல் சிறையில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு..
X

சென்னை புழல் சிறை முகப்பு. (கோப்பு படம்).

சென்னை புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சட்டமன்ற பொது கணக்கு குழுவை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் 6 பேர் கொண்ட இந்தக் குழுவினர் தமிழகம் முழவதும் அவ்வப்போது சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

மேலும், நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும் பணிகளில் ஏதாவது குறை இருந்தால் அதை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்வது இந்தக் குழுவின் முக்கிய பணி ஆகும். சில பணிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதற்கும் இந்தக் குழு பரிந்துரை செய்யும்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னை புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை சிறைவாசிகள், விசாரணை சிறைவாசிகள், மகளிர் சிறைவாசிகள் என 3 பிரிவுகளில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், சிறைவாசிகளின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து, சிறைக்குள் சிறைவாசிகள் மேற்கொண்டு வரும் ரொட்டி தயாரிப்பு பணி, செக்கு எண்ணெய் தயாரிப்பு பணிகள் குறித்து சிறை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

மேலும், சிறைக்குள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி பயிற்சி, பார்வையாளர்கள் சந்திக்கும் அறை, சிறை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare