பொள்ளாச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது: 56 சவரன் நகைகள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, கோட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தனிப்படை காவல் துறையினர் பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் யமஹா ரே வாகனத்தில் அந்த நபர் சுற்றி திரிவதும், வீட்டில் ஆட்கள் இல்லாத பகுதிகளில் நோட்டம் விடுவதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதன் பேரில் குற்றவாளியை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கோட்டூர் பகுதியில் குற்றவாளி சுற்றி வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வசிக்கும் வீட்டில் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர் மீது மதுரை மாவட்டத்தில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் கோட்டூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதியில் வீடு புகுந்து திருடிய ஆறு வழக்குகளில் தொடர்புடைய 28 லட்சம் மதிப்பிலான 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ராமச்சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன் மீது மதுரையில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது. அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதால், குடும்பத்துடன் இடம் பெயர்ந்து கோட்டூர் பகுதியில் வீடு எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் உரியவடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களுக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu