விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

தொடர் விடுமுறை காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-10-25 16:50 GMT

விவேகானந்தர் மண்டபம். கோப்பு படம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இங்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்தார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம்  கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.  இதன் அருகே மற்றொரு பாறையில் உலகிலேயே  உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலை உயரம் 133 அடி. இவைகளை பார்வையிடவும், சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.  

விவேகானந்தர் நினைவு மண்டபம்

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை காரணமாக கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. கன்னியாகுமரி கடலில் உள்ள  விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து இருந்து படகில் சென்றனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை  அன்று 6 ஆயிரத்து 600 பேரும், ஞாயிற்றுக்கிழமை அன்று  8 ஆயிரத்து 900 பேரும், தீபாவளி பண்டிகை அன்று மட்டும்  9 ஆயிரத்து 400 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

 திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து  பேச்சிப்பாறை அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டி 4500 கன அடி உபரி நீர் வெளியெற்றப்பட்டது. இந்த  தண்ணீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஞாயிறு வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்  தீபாவளி நாளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது தண்ணீர் அதிகமாக விழும் இருபகுதிகளில்  தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற  பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து  மகிழ்ந்தனர். 

மெட்ரோ ரெயில்

 தீபாவளி பண்டிகை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்னைக்கு படையெடுத்தனர். அவர்கள் சென்னையில் ஓடும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்து மகிழ்ந்தனர். இதனால் கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரெயிலில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் பயணிகள் பயணம் செய்தனர்.  21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அதிகபட்சமாக 2 லட்சத்து 63 ஆயிரத்து 610 பேரும்,  20-ந்தேதி 2 லட்சத்து 48 ஆயிரத்து 556 பேரும், 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 166 பேர் பயணம் செய்துள்ளனர்.  சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கியது முதல் இதுவரையில் இப்போது தான் அதிகபட்சமாக பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News