விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படும் சாலை ஹிப்னாஸிஸ் என்றால் என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் தினமும் ரோடு விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை, சாதாரண மரணங்களை விட அதிகம் இருந்தது.;
நாட்டில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு விட்டதால், சாலை விபத்துக்கள் கட்டுக்குள் வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. ஆனால் சாலை விபத்து அபாயங்களில் இருந்து நாம் முழுமையாக மீண்டு விட்டோம் என்று உறுதியாக கூற முடியாது. சாலை விபத்துக்களில் வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை விட, மனிதனின் செயல்பாடுகளால் ஏற்படும் கோளாறுகளே அதிகம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மனிதக்கோளாறுகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சாலை ஹிப்னாஸிஸ். சாலை ஹிப்னாஸிஸ் என்பது பெரும்பாலான ஓட்டுநர்களுக்குத் தெரியாத, அவர்களால் உணரக்கூட முடியாத ஒரு ஒரு உடல் நிலை கோளாறு. சாலையில் இரண்டரை மணிநேரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டிய பிறகு இது தொடங்குகிறது.
இந்த சூழலில் அதாவது, ஹிப்னாஸிஸில், ஓட்டுநரின் கண்கள் திறந்திருக்கும், ஆனால் கண்கள் பார்ப்பதை மூளை பதிவு செய்யாது அல்லது பகுப்பாய்வு செய்யாது. சாலை ஹிப்னாஸிஸ் என்பது உங்களுக்கு முன்னால் நிறுத்தப்படும் வாகனம் அல்லது டிரக் மீது மோதுவதற்கு முதன்மையான காரணம். சாலை ஹிப்னாஸிஸ் கொண்ட ஓட்டுநருக்கு விபத்து நடந்த தருணம் வரை கடைசி 15 நிமிடங்கள் நினைவில் இருக்காது. அவர்கள் தங்கள் சொந்த வேகத்தையோ அல்லது அவர்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்தையோ பகுப்பாய்வு செய்ய முடியாது.
வழக்கமாக, விபத்து 140 கிமீ வேகத்தில் செல்லும் போது தான் அதிகளவில் நிகழ்கிறது. சாலை ஹிப்னாஸிஸிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒருமுறை நிறுத்தி, நடந்து, தேநீர் அல்லது காபி குடிப்பது அவசியம்.
வாகனம் ஓட்டும் போது குறிப்பிட்ட இடங்கள் மற்றும் வாகனங்களை கவனத்தில் கொள்வதும் நினைவில் கொள்வதும் முக்கியம். கடைசி 15 நிமிடங்கள் டிரைவருக்கு நினைவில் இல்லை என்றால், ஓட்டுநர் தன்னையும் பயணிகளையும், மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம்.
சாலை ஹிப்னாஸிஸ் அதிகளவில் இரவில் அடிக்கடி நிகழ்கிறது, மேலும் பயணிகளும் தூங்கினால், நிலைமை மிகவும் சிக்கலானது. ஓட்டுநர் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒருமுறை வாகனத்தை நிறுத்த வேண்டும். 5- 6 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நடக்க வேண்டும், மற்றும் அவர்களின் மனதை திறந்து வைக்க வேண்டும். கண்கள் திறந்திருந்தாலும் மனம் மூடியிருந்தால் விபத்து தவிர்க்க முடியாதது. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக ஓட்டுங்கள்.