மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறியலாம்..!

ஏ.ஐ. மூலம் மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறியலாம் என அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.;

Update: 2024-08-01 05:27 GMT

மார்பக புற்றுநோய் கண்டறிதல் 

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஜமீல் கிளினிக் ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளன. இதற்கு ‘மிராய்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதன்படி 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், ஓக் புரூக் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘ரேடியோலாஜிக்கல் சொசைட்டி ஆப் நார்த் அமெரிக்கா' அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் 8 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மேமோகிராம் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும். ஆனால் சில நேரங்களில் மேமோகிராம் மூலம் மருத்துவர்களால் முன்கூட்டியே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியவில்லை.

இதற்கு தீர்வு காணும் வகையில் ‘மிராய்' என்ற பெயரில்புதிய செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும். இதன்மூலம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘சயின்ஸ் நியூஸ்'இதழில் இந்த செய்தி அண்மையில் வெளியானது. இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘சயின்ஸ் நியூஸ்' செய்தியின் தலைப்பை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் நினைப்பதை விட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் உடல்நலம் சார்ந்த இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News