அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ரூ.23 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
யுபிஐ மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். மொத்தமாக கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10 சதவீதமும், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 14 சதவீதமும் அதிகம் ஆகும். கடந்த அக்டோபரில் நாளொன்றுக்கு சராசரியாக 53.5 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.75,801 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் 50 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,800 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது.
நாட்டின் அன்றாட பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தியது.
தற்போது நாடு முழுவதும் பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.