விழுப்புரத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி: போக்குவரத்து மாற்றம்
விழுப்புரத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது;
விழுப்புரம் நகரில் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் நான்குமுனை சந்திப்பில் இருந்து பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் வரை சாலையின் இருபுறங்களிலும் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின் கீழ் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையின் இருபுறங்களிலும் இணைக்கும் வகையில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குமுனை சந்திப்பில் இருந்து பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் வரை முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் ஆகிய மார்க்கங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வகையிலும், அதுபோல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட மார்க்கங்களுக்கு அதே புறவழிச்சாலை வழியாக செல்லும் வகையிலும் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
வடிகால் வாய்க்கால் மற்றும் பாலம் அமைக்கும் பணி 2 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.