அட்சய திருதியை: விழுப்புரம் நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.;
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசை தினத்திலிருந்து 3ம் நாளை அட்சய திருதியை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அட்சய தினத்தில் எந்தவொரு பொருட்கள் வாங்கினாலும் தொடர்ந்து அந்த பொருட்கள் அதிகளவில் வந்து நம்மிடம் சேரும் என நம்பிக்கை. தங்கம் மட்டுமில்லாமல் எந்தபொருள் வாஙகினாலும் அதன் மதிப்பும், மீண்டும் வாங்குகின்ற சக்தியும் நம்மிடையே உருவாகும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் பொதுமக்களிடையே ஒரு கருத்து உள்ளது.
ஆடி மாதம் துணி வியாபார விற்பனை குறைந்து காணப்பட்டதால், அதை சரிக்கட்டும் நோக்கத்தில் ஆடித்தள்ளுபடி என்ற புதிய யுக்தியை கையாண்டு தீபாவளி பொங்கல் விழாக்கால விற்பனையை விட மும்மடங்கு உயர்த்தியதை போல, தற்பொழுது நகை கடை உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் வாங்கும் சக்தி பன்மடங்கு உயரும் என கூறி தங்களின் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர்.
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள், சாதாரண நகை கடை வரை தங்கம் வாஙகுவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும், விழுப்புரம் புதுவை சாலையில் அமைந்துள்ள கடையிலும், மேலும் விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.