விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி எளிது: கலெக்டர் மோகன்

மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதாக்கி கொள்ளலாம் என கலெக்டர் மோகன் கூறினார்

Update: 2022-03-17 04:10 GMT

மாணவர்களுடன் கலந்துரையாடும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

பிளஸ்-2 வகுப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணத்தை நிர்ணயிக்கும் ஆண்டாகும். இந்த கட்டத்தில் உள்ள மாணவர்களாகிய நீங்கள், தொலைநோக்கு சிந்தனையுடன் வெற்றியை உரித்தாக்கி கொள்ளும் வகையில் வெற்றி இலக்குடன் திட்டமிடுதல் வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியம் முழுமையாக வெற்றி பெற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி உங்கள் லட்சியம் உங்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் ஒவ்வொருவரும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதாக்கிக்கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகளுடன் உடனிருந்து காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News