கலவரம் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கலவரம் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.;

Update: 2021-03-30 08:12 GMT

தேர்தலில் கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஏழு தொகுதிகளுக்கும் 21 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 7 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மாவட்ட எல்லைகளில் 9 நிலையான சோதனை சாவடிகள் மற்றும் தேர்தலுக்காக 5 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து தேர்தல் நெருங்குவதால், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 7 போலீஸ் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு குழுவினர் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். தேர்தல் வாகன சோதனை பணிகளில் 500 போலீசாரும், துணை ராணுவத்தினர் 560 பேரும் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தல் அறிவித்த பிறகு சாராய வியாபாரிகள் 170 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 220 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேர்தலில் கலவரத்தை துாண்டும் வகையிலும், தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News