விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 784 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா நோய் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 12, 19-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்து 86 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற்றனர்.
இதனை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 784 இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இதில் 71 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதுடன் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்/
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.