விழுப்புரம் மாவட்டத்தில் அஞ்சல் வாக்கு சேவை மையம் திறப்பு

தோ்தல் பணியில் உள்ள காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்த அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் திறக்கப்பட்டன.;

Update: 2021-03-29 04:28 GMT

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் வாக்களிக்க வசதியாக, 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் உள்பட்ட பகுதிகளில் தபால் வாக்கு செலுத்துவதற்கான 'அஞ்சல் வாக்கு சேவை மையங்கள்' ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மயிலம் தொகுதிக்கு பவ்டா கலை, அறிவியல் கல்லூரியிலும், திண்டிவனம் தொகுதிக்கு மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வானூா் தொகுதிக்கு அரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியிலும், விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் தொகுதிக்கு ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

இந்த அஞ்சல் வாக்கு சேவை மையங்களில் காவல் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினா்.விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி அஞ்சல் வாக்கு சேவை மையத்தில் காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்தியதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News