கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி பல்வேறு வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது;
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் (2021-22) வங்கிகள் மூலம் ரூ.6,105.49 கோடி வரை கடன் வழங்க தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபர்டு) இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து நபார்டு வங்கியின் விழுப்புரம் மாவட்ட உதவிப் பொதுமேலாளா் வி.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்கட்டமைப்பு, வேளாண் வளா்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்காக வளா்ச்சித் திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் நபார்டு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த நிதி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.6,105.49 கோடி கடன் வழங்க நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது,கடந்த நிதி ஆண்டில் (2020-21) நபார்டு வங்கி பல்வேறு திட்டங்களுக்கு கடன் வழங்கியுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தாண்டும் நபார்டு திட்டங்களை அறிந்து அதற்கான கடன் வசதிகளை பயனாளிகள் பெறலாம்.
கடந்த ஆண்டு கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.99 கோடியில் 47 திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அரசுக்கு நபார்டு ரூ.89 கோடி கடன் வழங்கியுள்ளது. குறிப்பாக மீனவா்களின் நலனுக்காக மரக்காணம் ஒன்றியம், பூமியா்பாளையத்தில் ரூ.20 கோடியில் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நீண்ட கால கிராம நிதியத்தின்கீழ் ரூ.5.40 கோடி, குறுகிய பருவ கால விவசாய நடவடிக்கைகளுக்காக ரூ.137 கோடி, சிறப்பு பணப் புழக்க மறுநிதியளிப்பின்கீழ் ரூ.100 கோடி என மொத்தம் சுமார் ரூ.242 கோடியை நபார்டு வழங்கியுள்ளது. அதேபோல, கிராம வங்கிக்கு ரூ.17.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.ஒலக்கூா் ஒன்றியம், ஈப்பாக்கத்தில் நீா் செறிவுத் திட்டத்தை ரூ.1.25 கோடியில் நபார்டு அறிமுகம் செய்தது. இதன் மூலம் 1,000 ஹெக்டோ் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ரூ.13 லட்சம் மானிய உதவியுடன் காய்கறிகளை உலா்த்தும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடு திட்டத்தின்கீழ் செம்மறி, வெள்ளாடு வளா்க்கும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், பால் விவசாயிகளின் வருமானத்தை மதிப்புக் கூட்டி இரட்டிப்பாக்குதல்ஆகியவற்றுக்காக ரூ.1.45 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதற்காக விழுப்புரம் கால்நடை பயிற்சி மையத்தில் 60 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயிகளை கூட்டுப் பண்ணைய முறைக்கு மாற்றுவதற்காக உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை நபார்டு உருவாக்கியுள்ளது. இதன்படி 5 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.8.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் தா்பூசணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.4.86 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
நள்ளாவூா் கிராமிய விற்பனை நிலையத்தில் பண்ணை விளைபொருள்கள், சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் ஆகியவற்றை சந்தைப்படுத்த ரூ.2.43 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் நோலம்பூா், விக்கிரவாண்டி, சின்னபாபுசமுத்திரம் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பை பலப்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும் விழிப்புணா்வு பிரசார திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி, ஊக்கத் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு நடவடிக்கைகளை மின்னணு முறையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,096 சுயஉதவிக் குழுக்கள் இ-சக்தி மின்னணு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளார்.