தற்காலிக ஆசிரியர் பணியிடம்: விழுப்புரம் மாவட்டத்தில் 5000 விண்ணப்பங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்தது.
இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதையொட்டி தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, இப்பணிக்கு ஜூலை 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது.
அதன்படி கடந்த 4-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 421 பட்டதாரி ஆசிரியர்கள், 185 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என 606 பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்திருந்தது.
அதன்படி தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் கடந்த 4-ந் தேதி முதல் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர். இப்பணிக்கு மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டதால் 3 கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 606 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.