விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய சுயேச்சைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய சுயேச்சை வேட்பாளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வைை பின்னுக்கு தள்ளி நிகராக சவால் விடும் வகையில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் உள்ள210 வார்டுகளில், 2 வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, மீதமுள்ள 208 வார்டுகளுக்கு, 935 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க.,வினர் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
அ.தி.மு.க.,விற்கு சவால் விடும் வகையில் விழுப்புரம் நகராட்சியில் அ.தி.மு.க. 7 , சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
திண்டிவனத்தில் அ.தி.மு.க. 4, சுயேச்சைகள் 3, கோட்டக்குப்பத்தில் அ.தி.மு.க. 3, சுயேச்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பேரூராட்சிகளில் வளவனுாரில் அ.தி.மு.க., 2, சுயேச்சைகள் 2, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. 3, சுயேச்சைகள் 3, செஞ்சியில் அ.தி.மு.க. 1, மரக்காணத்தில் அ.தி.மு.க. 4, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர்
திருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க.வில் யாரும் வெற்றி பெறவில்லை. ஆனால், சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அரகண்டநல்லுாரில் அ.தி.மு.க., 4, சுயேச்சை 1, அனந்தபுரத்தில் அ.தி.மு.க., 5, சுயேச்சை 1 என மொத்தம் அ.தி.மு.க.,வினர் 33 இடங்களிலும், சுயேச்சைகள் 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், கோட்டக்குப்பம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சியில் அ.தி.மு.க.,வை விட சுயேச்சைகள் அதிகமாக வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து, அதிமுகவை பின்னுக்கு தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.