வாக்குச்சாவடிக்கு அனுப்ப வாக்கு இயந்திரங்கள் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு: வாக்குச்சாவடிக்கு அனுப்ப தயார்;
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவற்றை பொருத்தி, இயக்கி சரிபாா்க்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து வரும் ஏப்.5-ஆம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய இயந்திரங்கள் கணக்கிடப்பட்டு அவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக பேரவை பொதுத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,368 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.செஞ்சி தொகுதியில் 13 வேட்பாளா்கள், மயிலம் 14, திண்டிவனம் 15, வானூா் 7, விழுப்புரம் 25, விக்கிரவாண்டி 14, திருக்கோவிலூா் 14 வேட்பாளா்கள் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 102 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இதில் அதிகபட்சமாக விழுப்புரம் தொகுதியில் 25 போ் போட்டியிடுவதால், இத்தொகுதியில் மட்டும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான பேலட் யூனிட் 2-ம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்காளா்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் சாதனம் ஆகியவை தலா ஒன்றும் வைக்கப்படும்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. விழுப்புரம் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சின்னங்களை பொருத்தும் பணி நிறைவுற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவற்றை பொருத்தி ஒவ்வொரு இயந்திரங்களையும் இயக்கி சரிபாா்க்கும் பணி விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஹரிதாஸ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் வெங்கடசுப்பிரமணியன், கோவா்த்தனன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் தொகுதியில் மட்டும் 888 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 396 கட்டுப்பாட்டுக் கருவிகள், 443 விவிபாட் சாதனங்கள் சரிபாா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.இதேபோல, பிற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில் ஊழியா்கள் இந்தப் பணியை செவ்வாய்க்கிழமை இரவே நிறைவு செய்தனா். செஞ்சி தொகுதியில் 436 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 436 கட்டுப்பாட்டுக் கருவிகள், 457 விவிபாட் சாதனங்கள் சரிபாா்க்கப்பட்டன.
அதேபோல, மயிலம் தொகுதியில் தலா 368 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 410 விவிபாட் சாதனங்களும், திண்டிவனம் (தனி) தொகுதியில் தலா 388 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 433 விவிபாட் சாதனங்களும், வானூா் (தனி) தொகுதியில் தலா 393 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 439 விவிபாட் சாதனங்களும் சரிபாா்க்கப்பட்டன.மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் தலா 396 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 443 விவிபாட் சாதனங்களும், திருக்கோவிலூா் தொகுதியில் தலா 419 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 468 விவி பாட் சாதனங்களும் சரிபாா்க்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3288 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,844 கட்டுப்பாட்டுக் கருவிகள், 3,179 விவிபாட் சாதனங்கள் சரிபாா்க்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.