போலீசாரிடம் இருந்து தப்பிக்க நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற வாலிபர்

போலீசாரிடம் இருந்து தப்பிக்க, ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சீருடை அணிந்து கொண்டு நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற வாலிபர்

Update: 2021-06-03 17:09 GMT

போலீசாரிடம் இருந்து தப்பிக்க நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற வாலிபர்

வேலூரை அடுத்த அரியூர், சிவநாதபுரம் பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாராயம் வாங்க சென்றனர். அவர்களை மறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் ஆன்லைன் வணிகம் மூலம் வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனத்தின் பெயர் கொண்ட சீருடை அணிந்துகொண்டு வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் வாடிக்கையாளருக்கு சாப்பாடு வழங்கி வருகிறேன் என்று கூறினார். இந்த கிராமத்தில் யாருக்கு சாப்பாடு வழங்கினாய், அவரின் பெயர் மற்றும் முகவரியை காண்பிக்குமாறு போலீசார் கேட்டனர். அதற்கு அவர் நான் நேரடியாக சென்று ஆர்டர் எடுத்து வருகிறேன். இனி தான் உணவு வாங்கி கொண்டு கொடுப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் காட்பாடி, காந்திநகரை சேர்ந்தவர் என்பதும், சாராயம் வாங்க சென்றதும் தெரிந்தது. தனது நிறுவன சீருடையில் சென்றால் போலீசார் பிடிக்கமாட்டார்கள் என நினைத்து சாராயம் வாங்க வந்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

மேலும், இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், அந்த நபர் உணவு வினியோகம் வழங்கும் தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறாரா? வாடிக்கையாளருக்காக சாராயம் வாங்க முயன்றாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News