வெளியூர் சென்றால் இணையதளம் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றால் இணையதளம் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேலூர் டிஎஸ்பி அறிவுறுத்தல்
வேலூர் போலீஸ் உட்கோட்டத்தில் பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றால் இணையதளம் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றால், அதுகுறித்து அருகேயுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்த வீடுகளை இரவு, பகலாக கண்காணிப்பார்கள் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் பலர் நேரில் செல்ல வேண்டும் என்பதால் தயக்கம் காட்டி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதனால் அந்த வீடுகளில் மர்மநபர்கள் பணம், நகையை திருடி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
பொதுமக்களின் தயக்கத்தை போக்கவும், அவர்கள் தகவல்கள் அளிப்பதை எளிதாக்கும் வகையில் வேலூர் போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 10 போலீஸ் நிலையங்களில் ஆன்லைனில் தகவல் அளிக்கும் புதிய நடைமுறையை வேலூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், வேலூர் வடக்கு மற்றும் தெற்கு, தாலுகா, சத்துவாச்சாரி, பாகாயம், அரியூர், விரிஞ்சிபுரம், அணைக்கட்டு, வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றால் செல்போனில் https://forms.gle/J3Kwr9iJhJfoN4y88 என்ற இணையதளமுகவரி மூலம் தகவல் அளிக்கலாம். பெயர், வீட்டின் முகவரி, செல்போன் எண், வீட்டை பூட்டி விட்டு செல்லும்நாள், திரும்பி வரும்நாள், அருகேயுள்ள போலீஸ் நிலையம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு, அவை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்படும். அதன்பேரில் பூட்டியிருக்கும் வீடு இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்று இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவத்தை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றால் புதிய நடைமுறையை பின்பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.