வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மின்கம்பங்களை அகற்றி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை
வேலூர் செல்லியம்மன் கோயில் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை புதிய பஸ்நிலையத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது :
புதிய பஸ்நிலையம் நுழைவுவாயில் அருகில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பழைய கட்டிடம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றி பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதி விரிவுபடுத்தப்படுகிறது . மேலும், பாலாற்று பாலம் வழியாக , சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து இந்து அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
கடந்த 7ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்அறிவுரையின்படி , காட்பாடி மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையிலிருந்து சர்வீஸ் சாலையில் வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் பகுதி வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தனியார் ஓட்டல் அருகே உள்ள மின் கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதன் பேரில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மின்கம்பங்களை அகற்றி விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.