வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆட்டோக்கள், நுழைவுவரி செலுத்தாத வெளிமாநில கார், லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்;
வேலூர் நகரில் ஆவணங்கள் இல்லாமல் பல ஆட்டோக்கள் இயங்குவதாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து வாகனச் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆட்டோக்களை மறித்து சோதனைச் செய்தனர். அப்போது டிரைவர்களிடம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது: கலெக்டர் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சோதனைச் செய்தோம். அப்போது வெளிமாநில வாகனங்கள் நுழைவு வரி கட்டாமல் தமிழகத்துக்குள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து நுழைவு வரி செலுத்தாத 2 லாரிகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பம்பர் பொருத்தப்பட்டிருந்த 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பொக்லைன் எந்திரங்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் சாலைவரி வசூலிக்கப்பட்டது. இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.