வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
வேலூரில் புதன் கிழமை கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது;
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதன்கிழமை முதல் கல்லூரிகள் மற்றும் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனினும் பரவலை கட்டுப்படுத்திடும் வகையில் பள்ளி, கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் கல்லூரிக்கு வரும் அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.