பொதுமக்கள் போராட்டம்: வேலூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது

Update: 2022-03-06 10:47 GMT

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 

வேலூர் சத்துவாச்சாரி 2--வது மண்டலத்துக்கு உட்பட்ட மந்தைவெளி தெரு வழியாக பாலாற்றுக்கு செல்ல வழி உள்ளது. இந்த பகுதியில் நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டது.

இந்த மதுபான கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பாதை வழியாக காங்கேயநல்லூர் பிரம்மபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் சென்று வருவார்கள்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் நலன் கருதியம்  சுற்றியுள்ள 1500 குடும்பங்கள் நலன் கருதியும் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மதுபான கடையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News