வேலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த மழை
வேலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் திடீரென மழை பெய்து வருகிறது. ஆனாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேலூரில் பகலில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். மாலை வேளையில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.
இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது.
வேலூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சேறும், சகதியும் ஆனது. காட்பாடி, காந்திநகர், கழிஞ்சூர், வஞ்சூர், சேனூர், ஜாப்ரா பேட்டை, காங்கேயநல்லூர், பிரம்மபுரம், கரசமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.