வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? பொதுமக்கள் ஆவல்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

Update: 2022-03-12 02:44 GMT

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல், புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணி, அங்கன்வாடி மையங்கள், பாதாள சாக்கடை திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம், 140 அரசு கட்டிடங்களில் சோலார் தகடுகள் பொருத்துதல், சூரியஒளியில் மின்சாரம் தயாரித்தல், கோட்டையை அழகு படுத்துதல் உள்ளிட்டவை முக்கியமானவைகளாகும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாதாள சாக்கடை பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளால் மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். பள்ளம் தோண்டிய சில தெருக்களில் இன்னும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. மேலும் சில தெருக்களில் பணிகள் முடிந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைத்து தெருக்களிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு இரும்பு கம்பிகள் வைத்துள்ளனர். இதனால் 20 அடி அகலத்திற்கு இருந்த தெருக்கள் 10 அடி அடியாக சுருங்கிப் போய் உள்ளன. பொதுமக்கள் சாலை வசதிக்காக பயன்படுத்திய பல தெருக்களும் சுருங்கி சின்னதாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தெருக்களில் பொதுமக்கள் வீடுகளின் முன்பு மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக வீடுகள் முன்பு நடை பாதைகள் அமைக்கப்பட்டு செங்கற்கள் பதித்துள்ளனர். இதனால் மரங்கள் வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் இன்னும் சாலை பணிகள் தொடங்கப்படாமலும், ஒரு சில இடத்தில் முடிக்கப்படாமலும் உள்ளது. எனவே, தொடங்கப்பட்ட இடத்தில் சாலை பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். அதே போல், அவை தரமானதாக இருக்க வேண்டும்.

வீட்டின் நுழை வாயில் மட்டத்தைவிட சாலையின் மட்டம் உயரமாக இருக்கக் கூடாது. பழைய சாலையை பெயர்த்து எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.

60 வார்டுகளில் உள்ள 4 ஆயிரத்து 502 கிலோமீட்டர் சாலைகளில், 685 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால் 200 கிலோ மீட்டர் தான் முடிந்துள்ளது என்று கூறினர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எப்போதுதான் முடிப்பீர்கள் என்ற கேள்விதான் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு இறுதி வடிவம் கிடைத்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.

Tags:    

Similar News