வெயிலை சமாளிக்க பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்கள்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க வேலூரில் சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தனர்.
வேலூரில் வெப்பத்தின் அளவு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகப்படியான வெப்பம், தண்ணீர் தாகத்தால் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மனிதர்களாலேயே தாங்க முடியாத வெப்பத்தை, சிறிய பறவைகள் எப்படி தாங்கும்?; வெயிலின் தாக்கம் காரணமாக பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகள் அடிக்கடி நடக்கின்றன.
உணவில்லாமல் கூட ஒரு சில நாட்கள் வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது என்பது, உலகம் அறிந்த உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.
எனவே பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது ஒரு சிறிய முயற்சி தான். நமது சுற்றுப் புறங்களில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறிய குவளைகளில் தண்ணீர் வைக்கலாம்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மரங்களில் டப்பாக்களை கட்டி சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தபின், அவை வந்து பருக ஓரிரு நாட்கள் ஆகலாம். பழக்கமாகி, தண்ணீர் அருந்த வரும்போதும், தண்ணீர் அருந்திவிட்டு செல்லும் போதும் நாம் கவனிக்க தொடங்கினால், அதில் ஏற்படுகிற இன்பம் அலாதியானது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.
வீடுகளில் தண்ணீர் வைப்பவர்கள், முயன்றவரை மண் சட்டியில் வைப்பது நல்லது. மண்சட்டியில் நீர் வைத்தால், அது வெகு நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் அதில் முங்கி குளித்து, உடல் சூட்டை தணித்துக் கொள்ளும்.
பிளாஸ்டிக் குவளைகளில் தண்ணீர் வைப்பதாக இருந்தால், அதன்மீது வெயில் படாமல், நிழலில் வைப்பது நல்லது என்றனர்.