சேறும், சகதியுமாய் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை
சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் கர்ப்பிணிகள் அவதி
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் சத்துவாச்சாரி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சத்துவாச்சாரி பகுதியை சுற்றி உள்ள மக்கள் மட்டும் அல்லாமல் தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் அதிக அளவில் அங்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது சுகாதார நிலையத்துக்கு செல்லும் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் மண் தோண்டப்பட்டு அங்கேயே கொட்டப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பயந்து கர்ப்பிணிகள் வேறு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.