வாடகை செலுத்தாத 237 கடைகளுக்கு நோட்டீஸ்
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாத 237 கடைகளுக்கு நோட்டீஸ்
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை வசூலிக்கவும், வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று நோட்டீஸ் வழங்கும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 4 மண்டல வருவாய் ஆய்வாளர்கள் வாடகை பாக்கியை வசூலிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள். வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 237 கடைகள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. அதனால் அந்த கடைகளுக்கு 2-வது மண்டல வருவாய் அலுவலர் குமரவேலு தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
மேலும் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்தும்படியும் அறிவுறுத்தினர். நோட்டீஸ் வழங்கிய பின்னரும் வாடகை செலுத்தவில்லை என்றால் அந்த கடைகளுக்கு விரைவில் 'சீல்'வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.