டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மே 24ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக ஜூன் 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, மளிகை, பலசரக்கு, பழம், பூ, இறைச்சி, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுள்ளது. அதுதவிர, மின் பணியாளர்கள், பிளம்பர்கள், வீட்டு பராமரிப்பு பணி செய்பவர்கள், எலக்ட்ரிக் கடைகள் என்பன உள்ளிட்ட சுய தொழில் செய்பவர்களும் இபதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட முதல் 15 நாட்களில் மட்டும் அரசுக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, மற்ற கடைகளை போல டாஸ்மாக் கடைகளை முன்பு இருந்ததை போல, குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டும் திறக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், டாஸ்மாக் கடைகளை திறந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.