மோர்தானா அணை 18-ந் தேதி திறக்க நடவடிக்கை. அமைச்சர் துரைமுருகன் தகவல்.

மோர்தானா அணையின் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிற 18-ந் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்;

Update: 2021-06-07 16:41 GMT

அமைச்சர் துரைமுருகன்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

வேலூர் மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 8 ஆயிரத்து 38 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 484 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைவில் தீர்வு காணப்படும்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தொற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் ஒரு முறை திறந்து விட்டால் 3 மாதங்களுக்கு பாலாற்றில் தண்ணீர் செல்லும்.

குடியாத்தம் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருவதால் வருகிற 18-ந் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக மோர்தானா அணை வலது, இடதுபுற நீர்வரத்து கால்வாய்கள் ரூ.48 லட்சத்தில் தூர்வாரப்படும்.

அணையின் நீர்வரத்து கால்வாயில் சிலர் உடைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தண்ணீரை திருடுகிறார்கள். அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு பணிகள் முடிந்தவுடன் தடுப்பணைகள் கட்டப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News