வேலூரில் நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-07 14:49 GMT

வேலூர் சதுப்பேரி ஏரி உபரி நீர் கால்வாயில் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் கொணவட்டம் பகுதியில் சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து 150 வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் பணி கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது.

உபரி நீர் கால்வாய் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயில் கலந்து அங்கிருந்து பாலாற்றுக்கு உபரி நீர் செல்கிறது. மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளனர். இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிக்கல்சன் கால்வாய் பகுதியில் முழுமையாக வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. சில வீடுகளில் சுவர்கள் மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அவற்றை மட்டுமே இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முறையான அளவீடு செய்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிக்கல்சன் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து வரைபடம் மூலம் அளவீடு செய்தனர். கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள எந்த கட்டிடமாக இருந்தாலும் இடித்து அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் மாங்காய் மண்டி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News