வேலூரில் விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்ததை கண்டித்து வேலூரில் விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனை கண்டித்து வேலூர் கோட்ட இந்து முன்னணி சார்பில் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலையை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், வேலூர் மாநகர செயலாளர் ஆதிமோகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விநாயகரிடம் முறையீடு செய்து வழிபட்டனர். பின்னர் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து விநாயகர் சிலையுடன் செல்லியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். இதில், வேலூர் கோட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.