கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வேலூரில் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களிடம் கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம், செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அமைச்சர் சேகர்பாபு இந்து கோவிலுக்கு சொந்தமான நகைகள் உருக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை கண்டித்து சென்னை, வேலூரில் பிரசார யாத்திரை நடத்தப்பட்டது.. இனி திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும். சாமி நகைகளை உருக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளது. கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் அரசு கோவில் நகை குறித்த தகவல் இல்லை. நன்கொடை குறித்த கணக்கும் இல்லை. ஒரேநாளில் கோவில் நகை குறித்து கணக்கெடுக்க வேண்டும் என அரசு கூறுகிறது. இவ்வாறு அவசரப்பட்டால், ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில்களில் உள்ள நகை, பணம் குறித்த விவரத்தை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.