வேலூர் நகைக்கடை கொள்ளையன் கைது: 15 கிலோ நகைகள் மீட்பு
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர்;
வேலுார், தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் டிசம்பர் 15ம் தேதி சுவற்றை துளை போட்டு 15 கிலோ நகை, 500 கிராம் வெள்ளி, பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், நகைக்கடைக்குள் புகுந்த சிங்க முக கொள்ளையன் கேமராவில் ஸ்பிரே அடித்து கொள்ளையடித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது தொடர்பாக காவல்துறையினர் எட்டு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். கொள்ளை சம்பவம் நடந்தபோது, அந்த பகுதியில் வந்த மொபைல் போன் அழைப்புக்களை ஆய்வு செய்தனர். அதில், அணைக்கட்டு அருகே இருந்து ஒரு செல்போனில் 56 முறை 21 நபர்கள் மொபைலுக்கு பேசியது தெரியவந்தது.
இதையடுத்து மொபைல் போன் ஆய்வு மூலம் அணைக்கட்டு அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்த டீக்காராமன், 27, என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் சிங்க முகமூடி அணிந்து கொள்ளையடித்ததும், இந்த கொள்ளை சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மயானத்தில் புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது.
மேலும், கொள்ளையடிப்பதற்காக 3 மாதம் மும்பைக்கு சென்று சிறப்பு பயிற்சி எடுத்து வந்ததும், இதற்காக விமானம் மூலம் மும்பைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் டீக்காராமனை கைது செய்து, அணைக்கட்டு அருகே குச்சிப்பாளையம் ஏரிக்கரையோரம் உள்ள மயானத்தில் புதைத்து வைத்திருந்த 15 கிலோ தங்க நகைகள், 812 கிராம் வைர நகைகள், 100.5 கிராம் பிளாட்டின நகைகள் கைப்பற்றினர்.