வேலூரில் வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விஜர்சனம்
வேலூரில் விநாயகர் சிலைகளை தயார் செய்யப்பட்ட 4 நீர்நிலைகளில் பொதுமக்கள் இன்று விஜர்சனம் செய்தனர்
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அன்றைய தினம் பொது இடங்களில் பல்வேறு வடிவங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் வழிபாடு நடத்துவார்கள் . இதையடுத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவது மற்றும் பாட்டுக்கச்சேரி நடத்துவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டும் .
3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்த சென்று நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும் . ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து விழாக்களும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது . மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும் , பூஜைகள் செய்து ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது .
என்றாலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து அவற்றை நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது . அதன்படி வேலூர் , திருப்பத்தூர் , ராணிப் பேட்டை , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை நேற்று முன்தினம் வைத்து பொது மக்கள் வழிபாடு செய்தனர் .
இதையடுத்து ஒருசிலர் அன்றைய தினமே விஜர்சனம் செய்தனர் . வேலூர் மாநகரில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க சதுப்பேரி, பாலாறு, விஐடி பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் வீடுகளில் வைத்து வழி பட்டவிநாயகர் சிலைகளை இன்று காலை முதல் விஜர்சனம் செய்து வருகின்றனர். விஜர்சனம் நடைபெறும் சதுப்பேரிக்கு செல்வதற்கான பாதை மின்விளக்கு அமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர். விநாயகர் சிலை கரைக்க உள்ளதால் மாவட்டம் முழுவதும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .