வேலூர் சதுப்பேரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

வேலூர் சதுப்பேரி உபரி நீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள 150 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Update: 2022-03-23 13:51 GMT

சதுப்பேரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக சதுப்பேரி ஏரி முழுமையாக நிரம்பியது.ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்து கொணவட்டம் பகுதியில் ஏராளமானோர் வீடு கட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இருந்து ஏரி உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் எளிதாக வெளியேறும் வகையில் உபரிநீர் கால்வாயை சீரமைக்க வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.

இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள சுவர்கள் எதுவும் இடிக்கப்படவில்லை.

இதனையடுத்து இன்று காலை வட்டாட்சியர் செந்தில் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதியில் கட்டியுள்ள வீடுகளுக்கு மாநகராட்சியில் வரியை செலுத்தி வருகிறோம். மேலும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணமும் முறையாக செலுத்தி வருகிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடுகளின் சுவர்களை இடிக்கக் கூடாது என அவர்கள் கூறினர். சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நடந்தது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாய் 110 அடி அகலம் கொண்டது. இந்த கால்வாய் தற்போது 25 அடியாக சுருங்கிவிட்டது. கால்வாயை ஆக்கிரமித்து இதுவரை சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து ஆக்கிரமிப்பு வீடு கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News