வேலூர் அருகே மர்மபொருள் வெடித்ததில் பசு மாடு வாய் சிதறி பலி
வேலூர் அருகே மர்மபொருள் வெடித்ததில் பசு மாடு வாய்சிதறி பலி;
வேலூரை அடுத்த சின்னசேக்கனூரை சேர்ந்தவர் தாதா (வயது 40). விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அவர் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு கிடந்த மர்மபொருள் மீது மாடு வாய் வைத்துள்ளது. அப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மாட்டின் தாடைப் பகுதி முழுவதும் கிழிந்து பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் ராஜவேலு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், வெடித்த பொருள் என்னவென்று சரியாக தெரியவில்லை. நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என கருதுகிறோம். அப்பகுதியில் உள்ள சில தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.