வேலூரில் மூன்று நாட்களாக தொடர்ந்து எரியும் மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் பாதிக்கப்படுவதாக கூறி மாநகராட்சியை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்குட்பட்ட சார்ப்பனாமேடு தண்ணீர் டேங்க் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 16 ம் தேதி ஏற்பட்ட தீ இதுவரை தொடர்ந்து எரிந்து வருகிறது. இதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாக கூறி வேலூர் மாநகராட்சியை கண்டித்து சார்ப்பனாமேடு பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும்சம்பவ இடத்திற்கு வேலுார் மாநகராட்சி அதிகாரிகள் வர வேண்டும்.
இதற்கு உரிய தீர்வு காணும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொது மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, இனி இப்பகுதியில் குப்பை கொட்டப்படாது என்றும் தற்போது ஏற்பட்டுள்ள தீயை அணைத்து இங்குள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் தீயணைப்பு வாகனம் மற்றும் மாநகராட்சி வண்டி மூலம் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறுவதை அறிந்ததும் அந்த இடத்திற்கு நேரில் வந்த தி.மு.க, அதிமுக வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் நேரிலும்,போனிலும் பேசி இதற்கு உடனே தீர்வு காணும்படி வலியுறுத்தினார்கள்.