வேலூரில் மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்று பேரிடர் கால நிவாரண நிதியாக அரசு தங்களுக்கு ரூ. 3000 வழங்க கோரியும், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஊனமுற்றோருக்கு ரூ. 3000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 5000-ம் என உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 சட்டத்தை அமல்படுத்தி வேலை வாய்ப்பினை வழங்க கோரியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முதல் இரண்டாம் கட்ட உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் நாளான நேற்றும் அரசு தரப்பில் இருந்து தங்களை இதுவரை அழைத்து பேசவில்லை என கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து தொடர்ந்து 3-வது நாளாக குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.